|
"பட்டாடை
கட்டிக்கொண் டிருக்கும் நல்ல
பால்நிலவே! இளவேனிற் பூவே! உன்னைத்
தொட்டாலும் கைமணக்கும்; உன்றன் பேரைச்
சொன்னாலும் வாய்மணக்கும்; ஆணும் பெண்ணும்
ஒட்டாமல் உறவில்லை; கலப்பே யின்றி
உலகத்தில் தனிப்பொருளாய் ஏது மில்லை;
வெட்டாமல் குளம்வருமோ? வயலின் நெல்லை
விதைக்காமல் முளைத்திடுமோ?" என்றான்
செவ்வேள்.
முதற்கட்டம் முற்றியது; மெச்சும் எச்சில்
முத்திரைக்குப் பின்னேதும் நிகழவில்லை.
புதுச்சங்கத் தமிழ்போன்றாள், வட்டமிட்டுப்
பூத்ததொரு பூப்போன்றாள் அருகில் நின்று
கதைசொன்னான்; கட்டழகி கேட்டாள்; பின்னர்க்
கருங்குழலி மிளகாயை அரைத்துக் கொண்டே,
"எதற்கத்தான் நாமிந்தக் கல்லை, 'அம்மி'
என்கின்றோம் கூறுங்கள்?" என்று கேட்டாள்.
"செம்பவளம் போன்றவளே! மிளகாய், மஞ்சள்,
சிறுபூண்டு போன்றவற்றைக் குழிவிக் கல்லால்
அம்மியம்மி அரைத்திடவே உதவுங் கல்லை
அம்மிக்கல் என்கின்றோம் அன்பே!" என்றான்,
கொம்புமலர் போன்றவளோ அதனைக் கேட்டுக்
குளத்துமலர் போலாகி, "இனிமேல் நீங்கள்,
அம்பலத்தில்கட்டுச்சோ றவிழ்த்தல் போலே
அனைவர்க்கும் தமிழ்விளக்கம் தாரீர்!" என்றாள்.
|