|
குற்றம் புரிந்த
மற்றொரு மங்கையோ,
கௌதம முனிவரின் கட்டில் மனைவியாம்!
இச்சையோ டொருநாள் இந்திரன்,
அவளை இருட்டிலே முத்தம் இட்டான் என்பதைப்
புராணம் புரட்டினால் புரிந்து கொள்ளலாம்.
தவஞ்செய் முனிவரின் தரும பத்தினி,
பருவ காலத்தில் பழுத்த மாங்கனி;
அகலிகை என்பாள் அழகின் விளக்கமாம்!
வெண்ணிலா அவளெழில் கண்டு வியக்குமாம்!
வதன வட்டமும் மைவிழி வாசலும்
தூண்டில் புருவமும் துடிக்கும் பருவமும்
நெய்கனிந் திருண்ட நீள்கருங் கூந்தலும்
சேர்ந்து பிறந்த செவ்வா யிதழ்களும்
கையும் காலும் மெய்யும் மேனியும்
எவ்வாறு நன்கமைந் திருத்தல் வேண்டுமோ,
அவ்வாறு நங்கைக் கமைந்திருந் தனவாம்!
நங்கையின் நடைகண்டு நாணிற்றாம் அன்னம்;
கட்டழகு மங்கையின் கன்னத்தை கண்டு
தேமாங் கனிகள் திரும்பிக்கொண டனவாம்!
புனலாடு தாமரை போன்ற மங்கையர்
ஆரிய நங்கையின் அழகினை வென்றிட
முடியாமற் போனதால் முக்காடிட் டனராம்!
உறுப்புநூல் வல்லார் குறிப்பிடும் எழிலின்
சிறப்பெலாம் ஒன்று சேர்ந்து திரண்டு
வையமே வியக்கும் வண்ணம் விளங்கினாள்
ஆணிப்பொன் மேனி அகல்யா தேவி!
|