|
நுணுக்கம் நிறைந்த
நூல்பல கற்றிடின்,
அகிலமே வியக்கும் அறிஞ னாகலாம்;
கல்வி செழித்தால் கவிஞ னாகலாம்;
நாவின் பயிற்சியால் நாவல னாகலாம்;
கத்தியைத் தீட்டாது புத்தியைத் தீட்டினால்,
கற்றார் மதிக்கும் கலைஞ னாகலாம்!
முற்றி முதிர்ந்த முயற்சியின் மூலம்
அனைத்தையும் பெறலாம்; ஆயினும், புவியிற்
பெறயிய லாதது பேரெழில் ஆகும்!
பிறரிட மிருந்துநாம் பெறமுடி யாததும்
உலகத்து மாந்தருள் ஒருசிலர்க் கமைவதும்
ஆசை தருவதும் அழகே யாகும்!
பிண்டத்தில் அமையப் பெறாதபே ரெழிலை
அண்டத்தில் வந்தபின் அடைவதற் கில்லை.
நீருக்கு நுரையும் நெல்லுக் குமியும்
நிலவின் உருண்டையில் நீங்காக் களங்கமும்
தாமரை மலருக்குத் தண்டிலே முட்களும்
அமைந்திருப் பதனை அனைவரும் அறிவர்!
வான்கவிந் திருக்கும் வையகந் தன்னில்,
ஏதேனும் ஒருகுறை இல்லாத பொருளில்லை;
எனினும் அகலியை இதற்குவிதி விலக்காம்!
எந்தக் குறையும் இல்லாத பொருளை
ஆரிய மொழியில் 'அகல்யம்' என்பர்.
மந்திர முனிவரின் மையல் மனைவி
அழகில் குறையே அற்றவள் ஆதலின்,
நகைமுகம் கொண்ட நங்கையை
அகல்யா தேவியென் றழைக்க லாயினரே!
|