பக்கம் எண் :

சுரதாவின் தேன்மழை75

6. மங்கையர் பூங்கா
என் கடமை
உரைகல்லில் சரிபார்த்த செம்பொன் போலே
       ஒளிவீசும் காலையில்நான் எழுந்தி ருந்து,
நுரைசெய்யும் ஆற்றில்நீ ராடச் செல்வேன்;
       நுணுக்கமுள்ள ஆசாரக் கோவை கூறும்,
வரிவெண்பா நீதியைப்பின் பற்றி வாழ்ந்து
      வருவதனால், நீரில்நான் உமிழ மாட்டேன்;
தரையில்நான் கால்விரலால் கீற மாட்டேன்;
       தண்ணீரில்ஆடைதனைப் பிழிய மாட்டேன்.

சீரறிந்த நீதிகளில் நெஞ்சம் வைப்பேன்;
      சித்திரத்தில் அன்றாடம் விழிகள் வைப்பேன்.
தேரறிந்த கோயிலுக்குப் போக மாட்டேன்;
       தேனறிந்த மல்லிகையை விடவே மாட்டேன்;
ஊரறிந்த பேரறிஞர் மேடைப் பேச்சை
       ஒருநாளும் நான்கேட்கத் தவற மாட்டேன்;
பாரறிந்த பைந்தமிழை அழிக்க வேண்டிப்
       படைவந்தே எதிர்த்தாலும் அஞ்ச மாட்டேன்.

ஈரத்திற் சிறந்தகடல் கத்தும் ஊரில்
       இருந்தவளாம் பரத்தைமாணிக் காத்தாள் என்பாள்,
நேரத்திற் கோர்வண்ண உடையும், ஒவ்வோர்
       நிமிடத்திற் கோர்நகையும் அணிவ துண்டாம்!
சாரத்திற் சிறந்தகவிச் சிலம்பும், சாத்தன்
       தந்தமணி மேகலையும் இருக்கும் போது,
பாரத்தைக் கொடுக்கின்ற நகையின் மீது,
       பற்றுவைத்து நான்தொல்லை கொடுப்ப தில்லை!