பக்கம் எண் :

சுரதாவின் தேன்மழை78

அஞ்சுதல், அடக்கம், நாணம்,
       அனைத்துமே நாட்டில் பஞ்சம்!
மிஞ்சிய தென்ன வென்றால்,
       விருப்பம்போல் நடப்ப தொன்றே!


பேய்மழை உண்டா?

முல்லை இளங்கொடி முட்டையும் இட்டது கண்ணா!
      குயில், முட்டை யிடமன்றி
         முல்லை யிடாதபடி கண்ணே!
அல்லி மலர்க்கொரு நல்ல கணவன்யார்; கண்ணா?
      குளிர் அம்புலி, என்னும்
          அழகு நிலவடி கண்ணே!

பேய்மழை நேற்றிங்குப் பெய்து கெடுத்தது கண்ணா!
      அடி! பெய்மழை தானுண்டு
         பேய்மழை ஏதடி கண்ணே!
வாய்மொழி குன்றிடின் தாய்மொழிக்குன்றுமோ கண்ணா?
      அடி! வாழைப் பழத்தைநாம்
         "வாளப்பள " மெனில் குன்றும்!

கல்வி இலாதவன் காட்டில் வளர்மரம் கண்ணா!
       இரு-கண்கள் இருந்தும்
         இலாதவ னேயவன் கண்ணே!
நெல்லின் சிறுகதை நீண்டு வருவதேன் கண்ணா!
      பசி, நீண்டு வளர்வதால்
         நெற்கதை நீளுது கண்ணே!

சக்தி இல்லாதவன் சாதிக்கக் கூடுமோ கண்ணா?
       வாழைச் சருகுகள் எவ்வாறு
          சாற்றினைத் தந்திடும் கண்ணே?
பக்தி புரிவதால் பாவங்கள் தீருமோ? கண்ணா!
       அம்பு -பட்டபுண் மீதுநூல்
          கட்டினால் ஆறுமோ? கண்ணே!