ஏற்றிய
விளக்கில் எண்ணெய் குறைந்திடின்
வளர்ந்த வெளிச்சம் வரவரக் குறைந்திடும்,
அதுபோல், பின்வந்தோர் ஆட்சி தளரவே,
பகையும் கொடிய பசியும் பிணியும்
குறையாக் கவலையும் குறும்புக் கலகமும்
அடிக்கடி தோன்றவே ஆடிற்று நாடு!
வடபெருங் கடலையும் மணிக்கடல் நீரையும்
இத்தமிழ் நாட்டின் எல்லைக ளாக்கி,
மொழியை ஒன்றாக்கி முடியைமூன் றாக்கி
வீரம் விளைந்தமூ வேந்தர் மரபிலே
வந்தோர்ஆண்ட மணித்திரு நாடாம்
தொண்டை நாடு சண்டைநா டானது!
தாய்மொழிப் பற்றும் தன்மான உணர்ச்சியும்
காலை நேரத்து நிழல்போல் குறைந்ததால்
சார மற்ற சரித்திரம் வளர்ந்தது,
வேற்று நாட்டினர் விழுங்கினர் தமிழரை!
தூங்கிய தமிழகம் தோற்றது பிறரிடம்!
புலிக்கொடி வீழவே எலிக்கொடி பறந்தது! |
ஆந்திர
அரசு
|
வேர்கொண்ட
புகழொடு சிறந்து விளங்கிய
தேர்வேந்தன் கிருட்டின தேவன் என்பான்,
செங்கழுநீர்ப் பட்டெனும் செங்கற் பட்டுக்குப்
பக்கத்தில் உள்ள பழம்புக ழூராம்
விடையீச் சுரத்தில் வீற்றர சாண்டனன்.
மரத்தின் கீழ்வளர் மரம்போல், ஒருசிலர்
அவனுக் கடங்கி ஆட்சி செய்தனர், |
|
|
|