வீரன்
காந்தவராயன்
|
காந்தவ
ராயன் கட்டிளங் காளை.
இமய மலையே எதிர்த்த போதிலும்
அசைப்பது கடினம் அன்னவன் தோளை!
அவனோ, குறுநில மன்னவன்; ஏந்துவாள்
வெற்றிகள் பெற்ற விழுப்புண் வீரன்!
பகைமுகங் கண்டு நகைமுகங் காட்டிய
நெருப்பு வன்னியன்! நினைப்பில் திண்ணியன்!
தாழ்ந்துபோய் உள்ளம் தளர்ந்துபோ யிருந்த
தமிழரை எல்லாம் தட்டி யெழுப்பிய
தலைவன்; இரும்பிடர்த் தலையார் போன்றவன்;
கிருட்டின தேவனை விரட்ட முயன்றவன், |
உரிமைப் போர்
|
வன்னிய
வீரனை அந்நியத் தெலுங்கன்
அடக்குதற் காகப் படைகளை அனுப்பினான்;
வந்த படைகளை வன்னியன் வீழ்த்தினான்;
பின்னரும் ஆந்திரன் பெரும்படை அனுப்பினான்,
முரட்டுக் குதிரைகள் முன்னே சென்றிட,
வினைத்தொகை யானைகள் விரைந்து நடந்திட,
வீர வன்னியன் வெறியோ டெழுந்தனன்;
அன்னவன் தம்பியும் அவனோ டெழுந்தனன்!
தடித்த தோளினர் தடக்கை வாளினர்
வெடித்த சிரிப்பினர் விழிக்கண் தீயினர்
கடித்த வாயினர் கருங்கடற் குரலினர்
தடித்த தோளினைத் தட்டி யதட்டினர்! |
|
|
|