பக்கம் எண் :

சுரதாவின் தேன்மழை83

வேங்கை வன்னிய வீரரும் அதட்டினர்,
இரும்பைத் திருத்தி இயற்றிய வாளினால்
அண்ணனும் தம்பியும் ஆற்றலைத் காட்டினர்.
வெட்டினர் தமிழர்! வீழ்ந்தனர் ஆந்திரர்!
குருதி பருகிக் கொடுவாள் சிவந்தது.

தலைகள் வீழ்ந்தன; மறவர் தடத்தோள்
மலைகள் சாய்ந்தன; மாற்றார் கைவேல்
இலைகள் உதிர்ந்தன; எல்லாம் சிதைந்தன!

பழுத்தசெங் கதிர்போய் படுக்கும் மேற்றிசைக்
கடற்கரை வழியே, கைவேல் கீழ்விழக்
கொங்கரை விரட்டிய கோமகன் ஆய்வேள்
போன்று விரட்டினான் போர்வீர வன்னியன்!
விடையீச் சுரத்து மீசை ஆந்திரன்
தீயென ஓங்கும் தீராப் பகைவரைச்
சூழ்ச்சியின் மூலம் தொலைக்கத் தொடங்கினான்.

புல்லுருவி முளைத்தது

முதலி ஒருவன்; அந்த முதலியோ
தேளொடு பாம்பொடு சேர்க்கத் தகுந்தவன்;
சதிசெய் வதிலே சகுனிபோல் சமர்த்தன்;
பார்புகழ் காந்தவ ராயனின் பகைவன்.

சுரீரென மாந்தரைச் சுடுஞ்சுடர்ச் சூரியன்
வகுத்த பகலும் வான்மீன் இரவும்
ஓடின; இழைத்த நாட்களும் ஓடின,
என்றென்றும் விரிந்தே இருந்திடும் வானம்,
ஈச்சங் கனிபோல் இருண்ட தோர்நாள்,
வானம் இருண்டதால் இருண்டது வையகம்!
இருண்ட பொழுதிலே எழுந்தான் முதலி.