பக்கம் எண் :

சுரதாவின் தேன்மழை84

கரடி புலிகள்வாழ் காட்டிலே நடந்தும்,
பாதையைத் தடுக்கும் பருவதம் கடந்தும்
பொன்முடித் தெலுங்கன் முன்வந்து வணங்கி
நின்றனன் அந்த நெருப்பு முதலி!

ஆந்திர வேந்தன் அவனை நோக்கி
"நீ யார்?" என்று நிமிர்ந்து கேட்டனன்.

"அடியேன் தங்கள் பகைவனின் பகைவன்;
குடிகளைக் காத்திடும் கொற்றவா கேளும்;
நிலத்திற்கு வீரனாய் நீருக்கு முதலையாய்,
விரிந்த காட்டுக்கோர் வேங்கையாய் இருப்பவன்
சாந்தமே அறியாக் காந்தவ ராயன்.

வாட்களோ கொல்லன் வடித்தகூர் வேலோ,
ஆட்களோ அவனை அழிப்பது கடினம்!
ஆயினும் அன்னவன் ஆசைக் கிழத்தியாம்
கொஞ்சும் வஞ்சகி குப்பாச்சி என்னும்
வேசியைக் கொண்டுநாம் வீழ்த்தலாம் அவனை"
என்று கூறினான் இயற்கை வஞ்சகன்.

அன்னவன் செய்தியை மன்னவன் கேட்டு
மகிழ்ச்சி யடைந்தான்! மலர்ச்சி யடைந்தான்!
நின்ற முதலியை நிருபன் நோக்கி,
"வாலிபம் கடந்த வயோதிக முதலியே!
நன்று நன்றுநின் நன்றியை என்றுமே
மறவேன் யா" னென மகிழ்ந்து கூறி
ஆறா யிரம்பொன் அவனிடம் நீட்டவே
இழிந்தோன் இருகரம் ஏந்தி வாங்கினான்.
வாங்கிய பரிசொடு, வீங்கிய நினைவொடு,
வேம்பு முதலி விடைபெற்றுச் சென்றனன்.