பக்கம் எண் :

சுரதாவின் தேன்மழை86

வினையின் விதை
ஆந்திர வேந்தன் அவளை நோக்கிக்
"காந்தவ ராயனைத் தீர்த்துக் கட்டி,
அன்னவன்தலையை என்னிடம் காட்டினால்
பலநூறு வராகன் பசும்பொன் பெறலாம்"
என்று கூறினன்: ஏந்திழை ஒப்பினள்,
விரைவில் வருவதாய் விடைபெற்றுத் திரும்பினள்.
 
இயற்கை சிரித்தது
கூன்மலர் என்று குறிப்பிடும் பாதிரிப்
பூக்களும் மாதவி மரத்தின் பூக்களும்
தேனொடு வாயைத் திறந்திடும் காலம்.

குட்டி யானைகள் கொட்டாவி விடுதல்போல்
இன்னிசை மூங்கிலில் எழுந்திடும் காலம்,
தேர்தேர்ந் தெடுப்பதிற் சிறந்தவேள் ஆய்போல்
தேன் தேர்ந்தெடுக்கத் தெரிந்த வண்டுகள்,
காந்தாரம் பாடிக் களித்திடும் காலம்.

செந்தீ போன்ற சிறந்தமாந் தளிரைக்
குயிலின் கூட்டம் கோதிக் கோதிக்
குறடுவாய் திறந்தே கூவிக் கூவி
இசையமு தளிக்கும் இளவேனிற் காலம்.

மையல் இரவு மலர்ந்தது! மூவைந்து
நாட்கள் ஏறிய நல்ல வெண்ணிலா
வட்டம் நீல வானில் மிதந்தது!