பக்கம் எண் :

சுரதாவின் தேன்மழை87

ஒப்பனைக் களஞ்சியம்
குறைந்த சிற்றடையும் நிறைந்தபே ரெழிலும்
கொண்ட பரத்தை குப்பாச்சி என்பாள்,
ஐம்பாற் கூந்தலை ஒருபா லாக்கியும்
கோதி முடித்தே கோலமலர் சூடியும்
கையால் எழுதா வரியொடு வளர்ந்த
பொய்யான விழிக்கும் புதியமை யூட்டியும்
ஆய்ந்தளந் தியற்றிச் செய்தநல் லாடையை
விரித்தே யுடுத்தும் மேனி மினுக்கியும்,
பருதி வட்டத்தைப் பழிக்கும் பதக்கம்
இறுதிவரை கெடாதபே ரெழில்முத் தாரம்
முதலாம் அணிகளை முறைகெடா தணிந்தும்
கண்ணாடும் மங்கை கண்ணாடி பார்த்தனள்.

தூதுத் தோழிகள் சூதப் பரத்தையின்
பாதச் சிலம்பினைப் பக்குவப் படுத்தினர்.

"வெள்ளை நிலவு விழித்ததா?" என்றே
அன்னவள் கேட்டாள், "ஆம்" என்றாள் தோழி.

நிலாமுற் றத்திலே உலாவ வெழுந்தனள்,
நடந்தனள் நங்கை; நடந்து செல்கையில்
அப்படி இப்படி அவளிடை அசைந்தது;
அழகு மல்லிகை அரும்பென விளங்கிய
காலில்சதங்கை `கலீர்கலீர்` என்றது.
நீல வானத்து நிலவையும் மீனையும்
பேரழகி நோக்கிப் பெருமூச்சுப் வீட்டனள்.
வெந்நீ ராடி வியர்த்ததோ எனும்படி
கள்ளப் பரத்தையின் கண்கள் சிவந்தன;
உருண்டு வெளிவந்த உதடுகள் துடித்தன;