விசயா
லயசோழ வேந்தன் என்பான்,
வேரொடு பகைவரை வீழ்த்திய நாளில்,
அங்கத்தில் தொண்ணூற் றாறுபுண் பெற்றனன்!
விழுப்புண் பெற்று விளங்கிய காந்தவன்,
பொய்விழிப் பரத்தையின் போர்விழி பாய்ந்ததால்
பழிப்புக் குரியபுண் பலநூறு பெற்றனன்!
பால்வகை தெரிந்த பரத்தையோ மீண்டும்
கொடுவாள் வீரணைக் கூர்ந்து நோக்கிக்
"கொப்புளங் கொண்ட குளிர்வானில் மிதக்கும்
இந்த வெண்ணிலா ஏன்புகை கின்றது?
கூறுவீர்" என்று குழைந்து கேட்டனள்,
திப்புத்தோள் வீரன் சிறுநகை செய்தே,
"என்னடி பெண்ணே! ஈர வெண்ணிலா
புகைகின்ற தென்றுநீ புதிர்போடு கின்றனை!
அமுதுசூல கொண்டநல் லழகு வெண்ணிலா
வட்டத்தில் புவிநிழல் வந்து படிவதால்
புகைதல் போன்று புலப்படு கின்றது.
கோதையே!" என்று கூறினன் வீரன்.
அவனை மயக்கினால்அதிகம் கிடைக்கும்,
இவனை இழுத்தால் ஏராளம் பெறலாம்,
விழிவலை விரித்தால் வீழ்ந்திடும் வானிவன்,
என்னும் கருத்தை இதயத்தில் வைத்தே
கணிக்கக் கூடிய கணிகை அதுகேட்டு
மொட்டுப் புன்னகை முகத்திற் காட்டினாள்.
மோது காமத்தில் மூழ்கி வந்தவன்
சூதுப் பரத்தையின் தோள்தொட நெருங்கவே
ஊடினாள்; சற்றே ஒதுங்கினாள் உலாமகள்! |
|
|
|