பக்கம் எண் :

சுரதாவின் தேன்மழை91

தொடங்கிற்று நாடகம்
வாள்தொட்டுப் பயின்று வந்தோன், பரத்தையின்
தொள்தொட்டுப் பயில தொடங்கும் வேளையில்,
அவிழ்ந்தவெண் தாழைபோல் அவளுடை அவிழ்ந்தது!
சித்திரக் கன்னம் சிவந்தது: வாயிதழ்
பெற்றசெந் நிறமோ பெயர்ந்தது வேறிடம்!

காந்தவ ராயன் கணிகையை நோக்கி,
''தவளை குதிக்கும் தடாகத்தில்வளராக்
குவளை சிவந்தது: குமுதம் வெளுத்தது
கோதையே!''என்று கூறினான்: அதுகேட்டுச்
சீரொடு நோக்கிச் சிரித்தபடி திரும்பிக்
கொண்டனள் கொலைசெயும் நோக்கம் கொண்டவள்.

நின்றவள் நகர்ந்தாள், நிழலும் நகர்ந்தது.
மங்கை நகரவே மன்னனும் நகர்ந்தனன்.

மயக்கிய மங்கையும் மயங்கிய மன்னனும்
பள்ளியறை நோக்கிப் பறந்து சென்றனர்!

தொட்டான்! தொட்டான்!
கவிழ்ந்து பூப்பூத்து நிமிர்ந்துகாய் காய்க்கும்
எள்ளில் எடுத்தநல் லெண்ணையின் நுரைபோல்
மென்மை கொண்ட மென்மலர் தூவிய
மஞ்சத்தில் அமர்ந்தனள்; மன்னனும் அமர்ந்தனன்.

தக்கோலம் தின்று தலையில்பூச் சூடிப்
பொய்க்கோலம் செய்த புணரிப் பரத்தை,
அழகுச்செந் தினையின் அரிசியைப் போன்ற
நரம்பு நிரம்பிய நல்யாழ் எடுத்தே
இசைய வைத்திடும் இசைத்தமிழ் வளர்த்தனள்!