மன்னவன் கேட்டு
மயங்கினான்; மயங்கி
மெத்தைப் பரத்தையின் மெல்லிய கைவிரற்
கொத்துக்கு முத்தங் கொடுத்து நிமிர்ந்தான்! |
அமுதமா? நஞ்சா?
|
எச்சில்
பரத்தை இடம்விட் டெழுந்துபோய்க்
கொல்லும் மருந்தைக் கொட்டித் கலந்த
பழச்சாறு கொணர்ந்தே "பருகுவீர்" என்றனள்.
"பாவைநீ இருக்கையில் பழச்சா றெதற்கு?
வேண்டாம் வஞ்சியே வேண்டாம்" என்றனன்.
"வெண்ணிலா வெளிச்சம் விண்மீ திருப்பினும்
எண்ணெய் விளக்கினை ஏற்றாதார் உண்டோ?
பருகுவீர்"என்றே பரத்தைவற் புறுத்தவே,
கிண்ணச் சாற்றினைக் கிளர்ச்சியோடு பருகினான். |
வீரன்
வீழ்ந்தான்!
|
ஆதிப் பொதுமகள்
அளித்தசா றதனில்
தோன்றா எழுவாய்போல் தோன்றா திருந்த
புதுவிடம் அன்னவன் உடலுட் புகுந்ததால்
முத்தங் கொடுத்து முடித்தோன் முடிவிலோர்
சத்தங் கொடுத்தபடி சாய்ந்தனன் மெத்தையில்!
மூச்சு முடிந்ததால் பேச்சும் முடிந்தது:
பிடியிடைப் பரத்தை பின்னர், மாண்ட
மன்னவன் உடலை வாட்கொண்டு வெட்டி,
வெட்டுண்ட தலையை வேந்தனுக் கனுப்பினாள். |