தோழி
ஓயாமல் வடக்கே ஓடும் கங்கையை
வேலேந்து சோழர்கள் வெட்டினர் என்றும்
பஃறுளி ஆற்றினைப் பாண்டியன் நெடியோன்
வெட்டினான் என்றும் விளக்கிக் கூறிய
பெண்ணே! செந்தமிழ் காத்திடுங் கண்ணே!
கண்கள் சிவந்திடக் காரணம் என்ன?
தலைவி
வான்கண் விழியா வைகறைப் பொழுதில்
செவ்வாய் கடுங்கண் வெண்ணகைப் பெண்டிரோடு,
மூச்சுநனை யாமலும் பேச்சுநனை யாமலும்
சேல்விழி அதனால் சிவந்துபோய் விட்டது!
தோழி
முந்நீர் வழக்கம் மகடுஉவோ டில்லை!
இனியவ் வழக்கம் ஏற்பதற் கில்லை;
காக்கை பாடினியின் பெயர்நச் செள்ளை
என்றெனக் குணர்த்திய ஈர நிலவே!
கன்னி அன்னமே!கல்வி அமுதமே!
உன்கை வளையல் உடைந்ததேன் கூறுக?
தலைவி
மணிக்குயில் கூவி மகிழ்ந்திடும் சோலையில்
ஆசைத் தென்றல் அசைந்திடும் மாலையில்
பந்து விளையாடிப் பழகினோம்; ஆங்கோர்
பாவை எறிந்தபூப் பந்து பட்டதால்,
வளையல் உடைந்தது மாங்கனி மங்கையே! |
|
|
|