பக்கம் எண் :

11

மாநகரத்தின் ஒருபாதாள அறையில் ஆங்கில நாட்டு மக்கள் ஒரு
கவிஞனுக்கு விழா எடுத்துக்கொண்டிருந்தார்கள். அந்தக் கவிஞன்
பெயர் ‘கதே’. அவன் எந்த நாட்டுக் கவிஞன் தெரியுமா? எந்த
நாட்டுக்காரர்கள் இங்கிலாந்து மண்ணிற் குண்டுகளைப்
பொழிந்துகொண்டிருந்தார்களோ அந்த நாட்டுக் கவிஞன்... ஆம்.
செர்மன் நாட்டுக் கவிஞன், வியப்பாயிருக்கிறதா?

அரசியல்வேறுபாடுகள்,கொள்கை முரண்பாடுகள் இவைகளெல்லாம்
ஒருபுறம் இருந்தாலும், அவைகளையெல்லாம் உதறித் தள்ளக்கூடிய
நயத்தக்க நாகரிகத்தை நல்ல கவிதைகள் வழங்குகின்றன - நல்ல
கவிஞர்கள் வழங்குகின்றார்கள்.

கவிதையின் வெற்றிக்கு - வல்லமைக்கு - இது ஒரு சரியான
சான்று.

இப்படிப் பிறமொழியாளருங் கூடப் படித்துப் பாராட்டத்தக்க
வல்லமைமிக்க கவிதைகளைக் கவிஞர் இராசேந்திரன் அவர்களும்
படைக்காமலில்லை.

‘நாணயம் மடிந்த நாள்’ ‘கயமையைக் கைதுசெய்’ ‘போலிகளை
நம்புகிறாய், போ! போ!’ போன்ற கவிதைகள் இந்திய மொழிகளுக்கு
மட்டுமல்ல, மற்றைய நாட்டு மொழிகளுக்கும் ஏற்றுமதியாக ஏற்றவை.

‘மன்னர் நினைவில்’ என்ற கவிதை, கபிலர், ஒளவையார்
போன்றோர் கண்ணீர் பெருகப் பாடிவைத்துள்ள கையறு
நிலைக்கவிதைகளுக்கு நிகரானது. இக்கவிதை ஒருகுறிப்பிட்ட
மன்னரின் மறைவுகுறித்து மட்டும் இயற்றப்பட்டது என்று நான்
எண்ணவில்லை. நெஞ்சில் நீதியும், நினைவில் தமிழும், கண்ணிற்
கருணையும், கையிற் கொடையும் கொண்டு இந்நாட்டை முறைசெய்து
காப்பாற்றி மாண்ட பழந்தமிழ் மன்னர்களை யெல்லாம் நினைத்து
இயற்றப்பட்டதாகவே நான் கருதுகிறேன்.

தெளிந்த சிந்தனை, சொற்சுருக்கம், அழகிய எள்ளல் குறிப்பு -
இவற்றைக் காணவேண்டுமா? இத்திரட்டைப் புரட்டுங்கள்!