பக்கம் எண் :

28

கட்டத்துக்கு வாடகை செலுத்த என் மாணவத் தோழர்களிடம்
பணம் வசூல் செய்து கொடுத்திருக்கிறேன். திராவிட இயக்க
மாணவர்களை கல்லூரிக்குப் பக்கத்தில் உள்ள உடைமரக்காட்டுக்கு
அழைத்துச் சென்று, இலைமறைவு காய் மறைவு அல்ல, தலைமறைவுக்
கூட்டம் நடத்தியிருக்கிறேன். திராவிட மாணவர் முன்னேற்றக்
கழகத்தை உருவாக்கி ‘மன்றம்’ இதழில் பொருளதாரக் கட்டுரைகள்
எழுதிக் கொண்டிருந்த நாவலரின் இளவல் திரு. இரா. செழியனை
அழைத்து நகரத்தின் காந்தி பூங்கா ஆலமரத்தின் அடியில் தொடக்க
விழா நடத்தியிருக்கிறேன். நான் பாரதி மன்ற செயலாராய்
இருந்தபோது அறிஞர் அப்பாத்துரையார் பேராசிரியர் மா.கி.தசரதன்,
பேராசிரியர் திருமாறன் ஆகியோரைக் கல்லூரிக்கு
அழைத்திருக்கிறேன். ஜீவாவையும் அழைத்திருக்கிறேன். பேராசிரியர்
ஆனபிறகு தந்தை பெரியாரையும் அழைத்திருக்கிறேன்.

இப்படி திராவிட இயக்கத்தில் - தி.மு.கழகத்தில் தீவிரமாக இருந்த
நான் கூடவே பொதுவுடைமைச் சிந்தனைகளுக்கும் ஆட்பட்டேன்.
தி.மு.கழகமே பொதுவுடைமைக் கோட்பாட்டை ஏற்றுக் கொள்ளும்
இயக்கம் என்ற கருத்தை வலியுறுத்த ‘கழகமும் கம்யூனிசமும்’ என்று
திரு.குமாரசாமியிடம் (நான் பி.ஏ.முதலாண்டு படிக்கும்போது
இரண்டாமண்டு படித்துக் கொண்டிருந்தார். நன்றாக எழுதுவார்.
சிந்திப்பார். இவர் வகுப்புத் தோழர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்
முன்னாள் அமைச்சர் திரு.தா. கிருட்டிணன், கூட்டுறவுத் துறையில்
பணியாற்றி ஓய்வு பெற்ற திரு.வெள்ளைச்சாமி, திரு. சாமிமுத்தன்,
திரு. வடிவேலு போன்றோர்) ஒரு கட்டுரை எழுதச் சொன்னேன்.
அவர் ‘கழகமும் கார்ல் மார்க்சும்’ என்று ஒரு நெடுங்கட்டுரை
எழுதினார். அது கவியரசு கண்ணதாசனின் ‘முல்லை’யில் வெளிவந்தது.
(திரு. குமாரசாமி பச்சையப்பன் கல்லூரியில் எம்.ஏ.