பக்கம் எண் :

74.மீரா கவிதைகள்

கள்வன்?

கிண்ணம் போல் காட்சிதரும் கமலப் பூவைக்
கீழ்த்திசையோன் முத்தமிடும் நேரம், பாலின்
வண்ணம்போல் மின்னுமுடை கழற்றி வைத்து
வனப்பொய்கை குளித்தேன் நான்; ஆயர் பாடிக்
கண்ணன்போல் கரையிலவன் தோன்றக் கண்டே
‘கள்வ’னெனப் பேரோசை எழுப்ப நெஞ்சில்
எண்ணமிட்டேன் இமைப்பொழுதில்; ஆனால் யாரும்
எடுத்தபொருள் எதுவென்றால் என்ன சொல்வேன்?

கீச்சலிடும் கிளிவாய்க்குப் பலியா காமல்
கிளைதொங்கும் பழங்காக்கக் கதிரோன் மேற்கில்
மூச்சுவிடும் நேரத்தில் தோட்டம் சென்றேன்;
முள்வேலி ஓரத்தில் ஒதுங்கி நின்றே
ஆச்சரியப் பிறவியென என்னை நோக்கி
அவன்மெல்ல நடைபோடக் ‘கள்வன்’ என்று
கூச்சலிட நினைத்தேன் நான்; ஆனால் யாரும்
கொய்தபொருள் எதுவென்றால் என்ன சொல்வேன்?