பக்கம் எண் :

மீரா கவிதைகள்.75

சிறைச்சாலை விட்டுவரும் தியாகி போலச்
செறிமுகிலைக் கிழித்துநிலாக் கிளம்பும் நேரம்,
இறைவனுக்கு விழா வெடுத்தார் ஊரார்! மேனிக்(கு)
ஏற்ற உடை, தங்க நகை அணிந்து கொண்டே
நிறைகூட்டம் போய்நின்றேன்; எதிரில் வந்தே
நெடுங்குன்றாய் அவன் நிற்கக் ‘கள்வன்’ என்று
பறைசாற்றப் பார்த்தேன் நான்; ஆனால் யாரும்
பறித்தபொருள் எதுவென்றால் என்ன சொல்வேன்?

இடுகாட்டின் அமைதியிலே வையம் மூழ்கி
இளைப்பாறும் - உயிர்யாவும் உறக்கங் கொள்ளும்
நடுநிசியில் தூங்கிக்கொண் டிருந்த போது
நலியாமல் அவன் வந்து கவிதை மேனி
தொடக்கண்டேன்; கண்திறந்தேன்; கனவில் வந்தே
தோன்றிப்பின் அவன்மறையக் ‘கள்வன்’ என்று
கடுஞ்சத்த மிடத்துணிந்தேன்! ஆனால் யாரும்
கவர்ந்த பொருள் எதுவென்றால் என்ன சொல்வேன்?

‘தமிழ்நாடு’