பக்கம் எண் :

86.மீரா கவிதைகள்

உலகம் பொல்லாதது?

பொல்லாத ஆள் அத்தான் நீங்கள் ! சும்மா
போங்கள்! நான் வரமாட்டேன்! அறிவு நூல்கள்
கல்லாத உள்ளத்தைப் போலி ருக்கும்
காரிருளில், நள்ளிரவில் தேடி வந்தால்
பொல்லாத இவ்வுலகம் பழியை அள்ளிப்
போடாதா? சாடாதா நம்மை? என்றும்
செல்லாத காசாகக் செய்தி டாதா?
சிந்தித்துப் பாருங்கள்.... மாட்டேன் அத்தான்!

பரிதிவிழும் நேரத்தில் குளத்தோ ரத்தில்
பருகும்நீர் எடுத்துவரும் போது, நீங்கள்
இருவிழியால் பார்ப்பதுவும் ஏக்கங் கொண்ட
இதழ்விரித்துச் சிரிப்பதுவும் அறிந்தே என்றன்
அருகிருக்கும் தோழியர்கள் என்னை மெல்லும்
அவலாக்கி விட்டார்கள்; போதும்! மேலும்
இரவினிலே எழுந்துவர ஆரம் பித்தால்....
எங்கேபோய் முடிந்திடுமோ? மாட்டேன் அத்தான்