மணல்வீடு கட்டிவிளை யாடிப் பாடி மகிழ்ந்தயிளம் பருவமென்றால் புதுவெள் ளம்போல் கணப்பொழுதில் ஓடோடி வந்தி ருப்பேன்! கண்டிப்பாய் அருகிருபன்! களிப்பேன்! இன்றோ மணமுடிக்கத் தக்கதொரு மங்கை யாக மாறிவிட்டேன்; வளர்ந்துவிட்டேன்; அதனால் உங்கள் தணற்பருவ ஆசைக்குத் தலைய சைத்தே தாவிவர முடியவில்லை! துணிச்சல் இல்லை!
சந்தைக்குக் கரும்புவந்து குவியும் மாதம் தம்பதிகள் ஆம் - மாதம்; இம்மா தத்தில் சிந்தைக்குள் உலாச்செய்யும் நீங்கள் மஞ்சள் திருத்தாலி கட்டியெனை அழைத்தி ருந்தால் எந்தஇட மென்றாலும் - காடோ, மேடோ- இந்நேரம் வந்திருப்பேன்; ஆமாம்! பெற்ற தந்தைக்கு மகள்!அத்தான்! இன்னும் உங்கள் தாரம்நான் ஆகவில்லை! என்ன செய்வேன்? கவிஞர் இளங்கம்பன் நடத்திய பாரத முழக்கம் இதழில் வெளிவந்தது. 1-3-63 |