பக்கம் எண் :

மீரா கவிதைகள்.89

தோல்இனிக்கும் சுவைப்பழமே! தொட்டால் செந்தேன்
சுரக்கின்ற புதுமலரே! கொடியே! உன்றன்
கால்வலிக்கும் நெடுநேரம் நின்றால்; என்றன்
கண்வலிக்கும் அதைக்கண்டு கொண்டி ருந்தால்!
வேல்வடிக்கும் கொல்லனுலை போலக் காலை
வெங்கதிரோன் ஒளிபரப்பும் முன்னர், ஆசைப்
பால்குடிக்க வேண்டுமடி! காலம் பொன்! பொன்!
பசிமார்பில் சாய்ந்திடடி! வாடி” என்றேன்

கட்டிலுக்குக் கூப்பிட்டேன்; வழக்கம் போலக்
கண்சாடை செய்திட்டேன்; அவள் சிரித்தாள்!
தொட்டிழுக்கப் பாய்ந்திட்டேன்; மான்போல் ஓடித்
தூரத்தில் போய்நின்றாள்; “அத்தான், நீங்கள்
தொட்டிழுக்கத் தொட்டிழுக்க மயங்கி வீழும்
தொடர்கதையை வளர்த்தால் நான் தானே மீண்டும்
தொட்டிலுக்குப் பக்கத்தில் நிற்க வேண்டும்!
தோள்வலிக்க நாள்தோறும் சுமக்க வேண்டும்!

கட்டுப்பாட் டைவளர்க்க வேண்டும் என்ற
கருத்துவழி யுளநீங்கள் நம்கு டும்பக்
கட்டுப்பாட் டையும்சிறிது கவனி யுங்கள்;
காதற்பாட் டைத்தினமும் பாடி, மேனி
ஓட்டும்பாட் டைக்கொஞ்சம் ஒதுக்கி வைப்போம்!
ஒருமைப்பாட் டைத் தடுப்போம்! இல்லை யென்றால்
கட்டுப்பாட் டைமீறிப் பிள்ளை பெற்றுக்
கவலைப்பாட் டையன்றோ படிக்க வேண்டும்?