102நாமக்கல் கவிஞர் பாடல்கள்

கல்லான மனமுடையோர் எதிர்த்த போதும்
       கலங்காத் தெளிவுடைய கர்ம வீரன்
வல்லாளன் வல்லபாய் பட்டேல் மாண்ட
       வருத்தமதை விரித்துரைக்க வார்த்தையுண்டோ?       1

காந்தியென்ற தவநெருப்பில் காய்ச்சிக் காய்ச்சிக்
       கசடொழிய மாற்றுயர்ந்த கனக மாகும்.
சாந்தியென்ற குளிர்மதியின் தன்மை யோடும்
       சத்தியத்தின் வாளேந்தும் சர்தா ராகும்
மாந்தருக்குள் தீயவரை அடக்கி யாளும்
       மந்திரியின் தந்திரத்தின் மார்க்க மெல்லாம்
வாய்ந்திருந்த வல்லபாய் பட்டேல் மாண்ட
       வருத்தமதைப் பொறுத்திருக்க வலிமை வேண்டும்.       2

அன்புமுறை தவறாத அமைச்ச னாகும்;
       அரசுகுறையாத ஆற்ற லுள்ளோன்;
துன்பநிலை பலகோடி சூழ்ந்திட் டாலும்
       துளங்காமல் துணிவுரைக்கும் துணைவனாகும்
இன்பசுகம் தனக்கெதுவும் வேண்டா னாகி
       இந்தியத்தாய்த் திருப்பணிக்கே எல்லா மீந்தான்;
நம்பகத்தின் வடிவெடுத்த வல்ல பாயை
       நாமிழந்த பெருந்துயரில் நாதன் காக்கும்.       3

காந்தியண்ணல் மறைந்திடித்த கலக்கம் தீர்ந்து
       கண்திறந்து புண்மறையக் காணு முன்னால்
சாந்தனவன் நமக்களித்த காவ லாளன்
       சர்தார்நம் வல்லபாய் பட்டேல் சாக
நேர்ந்துவிட்ட இத்துயரால் நமது நெஞ்சம்
       நெக்குவிடத் தக்கதுதான் என்றிட் டாலும்
சோர்ந்துவிடக் கூடாது பட்டேல் போலச்
       சுதந்தரத்தைக் காந்திவழி தொடர்ந்து காப்போம்.       4