சாதிகுலம் பிறப்புகளாற் பெருமை யில்லை; சமரசமாம் சன்மார்க்க உணர்ச்சி யோடே ஓதிஉணர்ந் தொழுக்கமுள்ளோர் உயர்ந்தோர் என்னும் உண்மைக்கோர் இலக்கியமாய் உலகம் போற்ற ஜோதிமிகும் கவிமழைபோல் மொழிமீ னாட்சி சுந்தரனாம் தன்குருவைத் தொழுது வாழ்த்தி வேதியருள் நெறிபிசகாச் சாமி நாதன் விரித்துரைக்கும் சரித்திரமே விளங்கி நிற்கும். 3 மால்கொடுத்த பிறமொழிகள் மோகத் தாலே மக்களெல்லாம் பெற்றவளை மறந்தார்; ஞானப் பால்கொடுத்த தமிழ்த்தாயார் மிகவும் நொந்து பலமிழந்து நிலைதளர்ந்த பான்மை பார்த்துக் கோல்கொடுத்து மீட்டுமவள் கோயில் சேர்த்துக் குற்றமற்ற திருப்பணிகள் பலவும் செய்து நூல்கொடுத்த பெருமைபல தேடித் தந்த நோன்பிழைத்த தமிழ்த்தவசி சாமி நாதன். 4 குறிப்புரை:-பலமிழந்து - சக்தியற்று; பிசகாமல் - தவறாமல்; நெறி - அறவழி. 57. கலியாணசுந்தர முதலியார் வாழ்க சலியாத சேவையும் தளராத ஊக்கமும் தணியாத ஆர்வ முள்ளோன்; நலியாத சொற்களால் நவசக்தி யூட்டிடும் நயமிக்க தேச பக்தன்; நிலையான கல்வியின் தெளியாத கொள்கையின் நேரான நெறியில் நிற்போன்; கலியாண சுந்தரமுதலியார் தமிழன்பர் கண்ணான ஒருவ னாகும். 1 |