பாடெலாம் தான்பட்டுப் பலனெலாம் பிறர்கொள்ளப் பங்கின்றி உதவு பண்பன்; ஏடெலாம் மேல்எனும் ‘என்கடன் பணிசெய்தல்‘ என்பதே எண்ணி யெண்ணி நாடெலாம் வாழவே நாளெலாம் தன்சுகம் நாடாது பாடு படுவோன்; வீடெலாம் தமிழ்மக்கள் கலியாணசுந்தரன் வெற்றிகொண் டாட வேண்டும். 2 கொல்லாமை பொய்யுரை கூறாமை என்பதே குறியாகக் கொண்ட தமிழைக் கல்லாத பேர்களும் களிகொள்ளத் தந்திடும் கலியாண சுந்த ரத்தின் செல்லான அறுபதாம் ஆண்டுதிரு நாளிலே தெய்வத்தைச் சிந்தை செய்து வல்லாண்மை குறையாமல் நூறாண்டும் அவன்வாழ மனமார வாழ்த்து கின்றோம். 3 குறிப்புரை:-சலியாத - வெறுப்பில்லாத; மனமார - மனம் பொருந்த மகிழ்ச்சியுடன்;தளராத - சோர்வில்லாத; பாடு - துன்பம். 58. உள்ளங் கவர்ந்த பண்டிதர் கலியாணசுந்தரனார் ‘பண்டிதர்‘ என்றால் பள்ளிக் கூடப் பையன் களுக்குப் பரிகா சச்சொல் ஆங்கிலப் பாடத்(து) ஆசான் மாரும் கணக்குப் போடக் கற்பிப் பவரும் பூகோள சாத்திரம் புகட்டு வோரும் 5 விஞ்ஞான அறிவை விளக்கு பவரும் சரித்திரம் சொல்லித் தருகிற பேரும் சித்திரம் வரையச் செய்கிற வாத்தியும் தேகப் பயிற்சி ‘டிரில்மாஸ்டர்‘ கூட ஓட்டமும் நடையும் உருட்டும் பிரட்டுமாய்க் 10 |