புலவர் சிவ. கன்னியப்பன் 115

59. சத்தியமூர்த்திக்கு வரவேற்பு

நித்திய அறங்கள் நாட்டில் நிலைத்திட உலகம் வாழ
உத்தமன் காந்தி காட்டும் ஒருவழி ஒன்றே உண்டு;
சத்திய சாந்த நோன்பின் தவச்சிறை யிருந்து வந்தாய்
சத்திய மூர்த்தி எங்கள் தலைவனே! வருக! ஐயா!       1

உடல்நலம் குறைந்தி ருந்தும் ஒருசிறு தயக்கமின்றிக்
கடன்என ஓடி அண்ணல் காந்தியின் ஆணை தாங்கித்
திடமுடன் தேச சேவை தீரர்கள் இனத்தைச் சேர்ந்தே
இடரிடைக் காத்தாய் பெற்ற இந்தியத் தாயின் மானம்.       2

ஏழைகள் துயரம் போக எளியவர் களைப்பு நீ்ங்கப்
பாழ்பட உவகை வாட்டும் பகைமைகள் குறைய வென்றே
வாழிய காந்தி சாந்த வாய்மையின் வழியில் நின்று
ஊழியம் செய்யு முங்கள் உதவியை உலகம் போற்றும்.       3

தீனரை வதைத்து வாட்டித் தின்றுடல் சுகித்து வாழும்
மானமில் லாத வாழ்க்கை மலிந்த(து) உலகில்; மற்ற
ஞானநல் வழியில் செல்ல நடத்திடும் காந்தி சாந்தச்
சேனையில் சேர்ந்தபேரைச் செகமெலாம் சிறப்புச் செய்யும்       4

தஞ்சம்வந் தவரை நம்பித் தன்னர சிழந்து நொந்து
பஞ்சமும் பிணியும் வாட்டப் பலதுயர் பட்டா ளேனும்
எஞ்சிய ‘சாந்தி‘ ஞானம் இன்னமும் குறைவி லாத
வஞ்சியாம் பார தத்தாய் வாழ்த்துவள் வாரித்தூக்கி.       5

பணத்தினை இழந்திட் டாலும் பலத்தினிற் குறைந்திட்டாலும்
குணத்தினிற் குறையக் கூசும் குலத்தினிற் பிறந்தோ மன்றோ?
கணத்தொடும் சிறையில் நொந்தும் கண்ணியம் குறைந்தி டாத
மணத்தொடும் வருவீர் தம்மை மாநிலம் மறவா தென்றும்.       6

வள்ளுவன் குறளும் வேத வடமொழி வகுத்த யாவும்
தள்ளரும் ‘சாந்தி‘ என்ற தனிப்பதக் கருத்தே யாகும்
கள்ளமில் லாமலெண்ணின் காந்தி சொல் அதுவே; காண்போம்
எள்ளரும் அதுவே யாகும் இந்திய நாகரீகம்.       7