140நாமக்கல் கவிஞர் பாடல்கள்

81. எம்மான் காந்தியை மறப்போமோ!

பல்லவி

எண்ணிய தவங்களை எடுத்தது முடித்துள
எம்மான் காந்தியை மறப்போமா!

அநுபல்லவி

புண்ணிய நதிகளும் கண்ணிய மடைந்தன
புனிதன் அஸ்திகள் புகுந்ததனால்.       (எண்)

சரணங்கள்

வானமும் வையமும் வணங்கிடும் ஐயன்
வரந்தரும் தேவரும் வரம்பெறும் மெய்யன்
ஞானமும் தவங்களும் நயம்பெறும் துறவி
நால்வகை யோகமும் சால்புறும் பிறவி.       (எண்)1

அண்டமும் சிறிதெனும் அமைதியின் பெருமை
அதைவிடப் பெரிதெனும் அருள்புரி அருமை
கண்டில தாகிய கடவுளின் நிலையை
காட்டிடும் காந்தியின் தெய்வீகக் கலையை       (எண்)2

மன்னுயிர் வாழ்ந்திடத் தன்னுயிர் கொடுத்தான்
மாபெரும் கருணையன் பரமனை அடுத்தான்
பொன்னுடல் சுமந்ததும் தீமையைப் போக்க
புகழுடம்பு இறந்ததும் அறங்களைக் காக்க.       (எண்)3

82. பகைவனுக்கருள் செய்

பல்லவி

பகைவனுக் கருள்தர மிகமகிழ் காந்தியைப்
பாடுவ தேதவ மாம்.       (பகை)

அநுபல்லவி

தகைபெரும் சால்பினை அகமுறப் போற்றிடில்
தரணியில் பகைமை உண்டோ.       (பகை)