சரணங்கள் பொறுக்கி எடுத்த சொல்லைப் புதுக்கி அமுதம்பூசிப் புளித்த செவிகள்கூடக் களித்து வியக்கப் பேசி முறுக்கி எதிர்த்தபேரும் செருக்கை மறந்துஐயன் முன்வந்து பொன்தந்து சொன்னபடிக்குச் செய்யும் (காணா)1 உண்ணா விரதம் கொண்டே உலகை நடுங்கச் செய்தும் ஒவ்வொரு மனிதரும் உள்ளம் திருந்தச் செய்தும் கண்ணாரக் கண்ட தெய்வம் காந்தி ஒருவரென்று கைகுவித் துலகெல்லாம் மெய்சிலிர்த் திறைஞ்சிட (காணா)2 கொடுமையை எதிர்த்திடச் சிறைவாசம் சென்றவன் கொலைஎண்ணப் போர்செய்து கொடுங்கோலை வென்றவன் மடமையில் இறுகிய தீண்டாமை மறைந்தது மதுஎன்ற அரக்கனும் முதுகிட்டுப் பறந்தனன். (காணா)3 91. காந்தியை நினை பல்லவி காந்தியை நினைப்பதே கடவுளை நினைப்பதாம் கருத்தினில் இருந்திடுவோம். அநுபல்லவி சாந்தமில் லாமல் சமரசம் இல்லை சமரசம் இலையேல் சந்தோஷம் ஏது? (காந்தி) சரணங்கள் சாந்தத்தின் சாகரம் காந்தியின் சரிதம் சத்திய சேகரம் காந்தியின் விரதம் நேர்ந்திடில் இதைவிட வேறெது தெய்வம் தினந்தினம் காந்தியை நினைத்திடில் உய்வோம் (காந்தி)1 ஊணிலும் உடையிலும் உரையிலும் சுத்தன் உள்ளும்புறமும் ஒன்றாம் உண்மையின் பக்தன் காணரும் கடவுளைக் காட்டிலும் துணைவன் காந்தியின் வழியன்றிக் கதிஎது இணையாம். (காந்தி)2 |