156நாமக்கல் கவிஞர் பாடல்கள்

அநுபல்லவி

மனிதன் என்று மண்ணில் உதித்தவருள்
மற்றவர் யாவர்இந்த மகிமை படைத்தவர்கள்?

சரணங்கள்

கல்வி நிறைந்தவர்கள் கலைகள் சிறந்தவர்கள்
காமம் உகந்தவர்கள் தர்மம் மிகுந்தவர்கள்
நல்வழி நின்றவர்கள் நானிலம் எங்குமுண்டு
நாமம் நினைத்தவுடன் ஏமன் பயமகற்றும்       (புனி)1

தவசு புரிந்தவருள் தானம் சொரிந்தவருள்
தந்நலம் முற்றும்விட்டுப் பன்னலம் தந்தவருள்
இவர்வழி வாழ்ந்தவர்கள் எண்ணற்ற பேர்களிலும்
எவர்க்குமில் லாதஏதோ இவர்க்குள் இருந்ததென       (புனி)2

போதிக்க என்றுவந்த புண்ணிய வான்களுக்குள்
பூமியிற் கண்டபல அவதார புருஷருள்
சாதித்துச் சத்தியத்தைச் சோதித்தும் ஆத்மபல
சக்தியைக் காட்டினவர் மற்றில்லை என்னத்தகும்.       (புனி)3

குறிப்புரை:-மகிமை - பெருமை; உதித்தவர் - தோன்றியவர்;
சோதித்து - ஆராய்ந்து.

103. அமுத வழி

பல்லவி

அறிவைக் கடைந்தெடுத்தே அருளைக் கலந்துதரும்
அமுதன்றோ காந்தி வழி.

அநுபல்லவி

உறவைக் கெடுத்துமக்கள் உயிரை வதைத்தே இந்த
உலகை நலித்துவரும் கலகக் கொடுமைதீர       (அறி)

சரணங்கள்

இறுகிக் கிடக்கும்பல இழிவான வழக்கங்கள்
இளகும் படிக்கேயோர் இனிமையை அளிக்கவும்
குறுகிக் கிடந்தமனம் குமுறிப் புரட்சி கொண்டு
கொடுமையை எதிர்க்கவும் மடமையை உதிர்க்கவும்.       (அறி)1