158நாமக்கல் கவிஞர் பாடல்கள்

105. அச்சங்கள் நீங்கும்

பல்லவி

நித்தமும் ஒருதரம் காந்தியை நினைத்தால்
நிச்சயம் நம்முடை அச்சங்கள் நீங்கும்

அநுபல்லவி

சத்தியம் வலுத்திடும் சாந்தியம் பலித்திடும்
நித்திய ஒழுக்கங்கள் நேர்மையில் நிலைத்திடும்       (நித்த)

சரணங்கள்

மானிடப் பிறவியின் மகத்துவம் விளங்கும்
மன்னுயிர் யாவிலும் தன்னுயிர் துலங்கும்
யான்என தென்றிடும் அகந்தைகள் கருகும்
ஆண்டவன் நினைவுடன் அன்புகள் பெருகும்       (நித்த)1

சுதந்தரம் என்பது சுத்தசன் மார்க்கம்
சூழ்ந்துள யாவர்க்கும் சுகந்தரப் பார்க்கும்
இதந்தரும் பணிசெயல் என்கடன் என்னும்
இங்கிதப் பெருங்குணம் தங்கிடப் பண்ணும்.       (நித்த)2

குறிப்புரை:-மகத்துவம் - பெருமை; மன்னுயிர் - நிலைபெற்ற உயிர்.

106. குளிர்ந்திடும் செழுங்கனல்

பல்லவி

காந்தியை நினை மனமே - உண்மைச்
சாந்தியைப் பெற தினமும்.       (காந்தி)

அநுபல்லவி

மாந்தருள் அற்புதம் மாநிலப் பெருந்தவம்
கூர்ந்திடும் அறிவினுள் குளிர்ந்திடும் செழுங்கனல்       (காந்தி)

சரணங்கள்

சோர்ந்திடும் பொழுதெல்லாம் சோகத்தைப் போக்கவும்
சுழன்றிடும் அறிவினைத் தெளிந்திடத் தேக்கவும்
நேர்ந்திடும் கவலையை நீக்கவும் மருந்தாம்
நினைத்திடும் பொழுதே இனித்திடும் நறுந்தேன்       (காந்தி)1