108. ஊனுடல் கொண்ட ஒரு தெய்வம் பல்லவி மானிட வர்க்கம் கண்டறியா ஒரு மாபெரும் புதுமை காந்தி மகான்! அநுபல்லவி வானுறை தெய்வம் ஊனுடல் கொண்டு வையகத் தேபுது வழிகாட் டியதென (மானிட) சரணங்கள் இந்திய நாட்டின் இப்பெரும் அற்புதன் எம்மிடை பிறந்ததும் ஒப்பரும் நற்பதம் நம்திரு நாடே நானிலம் முழுதிலும் ஞான ஒளிபரப்பும் மோனம் அறிந்ததென (மானிட)1 அன்பும் அருளும் அறிவும் ஆற்றலும் அறநெறி வழுவா ஒழுக்கம் போற்றலும் இன்பம் தருகிற எல்லாக் குணங்களும் இப்படிச் சிறிதும் தப்பற இணங்கிட (மானிட)2 சத்திய சாந்தம் உத்தமம் என்று சாதனை புரிந்தவர் மெத்தவும் உண்டு நித்தமும் வாழ்க்கையில் எல்லா நிலையிலும் நிறைகுறை யாதவர் இவர்போல் இலையென. (மானிட)3 109. பண்பை வளர்க்கும் காந்தி பல்லவி உயிரைக் கொடுத்துநமக் குரிமை கிடைக்கச் செய்த உத்தமன் காந்திநம் உயிரன்றோ! அநுபல்லவி பயிரை வளர்க்கும் நீர்போல் பண்பை வளர்க்கும் காந்தி பக்தி கெடா திருந்தால் பெற்றச் சிறப்படை வோம். (உயிரை) |