172நாமக்கல் கவிஞர் பாடல்கள்

பட்டணத்து வீதிகளில் சுற்றியலைந்து - மிகப்
பாடுபடும் கிராமத்துப் பத்தினிப் பெண்கள்
இஷ்டமுடன் தம்குடிசை நிழலிருந்து - நூல்
இழைத்துப் பிழைப்பதென்று ஆடுராட்டே!       3

கள்ளுபீர் சாராயம் காமவகைகள் - கெட்ட
கஞ்சா அபின்க ளெல்லாம் ஓடியொளிக்க
பிள்ளைகுட்டிப் பெண்ஜாதி வயிறார - உண்ணப்
பெற்றதே சுதந்தரமென் றாடுராட்டே!       4

உழுது நெய்துபல தொழில்செய்து - பொருள்
உதவும் வாணிபமும் முயல்வதல்லால்
தொழுது பணிபுரியும் தொழில்களெல்லாம் - இனித்
தோல்வி யடையுமென் றாடுராட்டே!       5

வம்பளந்து வீண்பொழுது போக்கமாட்டார் - பெண்கள்
வாசலிலே கூட்டமிட்டுப் பேசமாட்டார்
துன்பமில்லை சோம்பியவர் தூங்கமாட்டார் - குடி
சுத்தப்படு மென்று சொல்லி ஆடுராட்டே!       6

ஜாதிஜனக் கட்டுகளை மதிக்காமல் - நித்தம்
தானடித்த மூப்பாக வாழ்ந்ததெல்லாம்
நீதிநெறி தெய்வவழி நினைத்தினிமேல் - சுகம்
நிரம்பத் திரும்புமென்று ஆடுராட்டே!       7

ஆங்கிலம் படித்தோமென் றகங்கரித்துச் - சொந்தம்
அக்கம்பக்கம் யாரெனிலும் மதியாமல்
தாங்களே பெரியரென் றிருந்ததெல்லாம் - இனித்
தலைகுனிந் தோடுமென்று ஆடுராட்டே!       8

சர்க்கார் மனிதரென்று மதிமயங்கிக் - குணம்
தக்கா ரெனினும்அவ மதித்தவர்கள்
சர்க்கார் ஜனங்களென்று மதிதெளிந்து - இனித
தாழ உரைப்பரென்று ஆடுராட்டே!       9