புலவர் சிவ. கன்னியப்பன் 187

துணிவோடு பணிசெய்து
       துணையாக நிற்கும்
குறியோடு புதுவாழ்வு
       அதுபெற்று விட்டால்
குறையேதும் இனியில்லை
       சுகமுற்று விட்டோம்.       (புது)5

135. வாழிய கொடியே!

பல்லவி

கொடியைக் கும்பிடுவோம் - நம்முடை நாட்டின்
கொடியைக் கும்பிடுவோம்.

சரணங்கள்

எந்தக் கடவுளை எவர்தொழு தாலும்
       எத்தனை வேற்றுமை நமக்கிருந் தாலும்
இந்தியர்க் கெல்லாம் பொதுவாம் தெய்வம்
       இந்தக் கொடியே இதிலென்ன ஐயம்!       (கொடி)1

சத்தியப் பாறையில் வேர்ஊன் றியகொடி
       சாந்தக் கோலின் உச்சியில் மணிமுடி
நித்திய மாகிய சுதந்தர வாழ்வினை
       நித்தமும் நினைத்திட நின்றெமை ஆள்வது.       (கொடி)2

சமரசம் காட்டிடும் துகிலினை வீசிக்
       சச்சர வாறிடத் தென்றலிற் பேசி
அமைதியும் அன்புடன் அனைவரும் பொதுவாம்
       அரசியல் நடத்திட அறிகுறி இதுவாம்.       (கொடி)3

காற்றொடு பெருமழை கலந்தடித் தாலும்
       கடுத்தவர் இருந்திடில் படையெடுத் தாலும்
போற்றிஇக் கொடியினை உயிரெனக் காப்போம்!
       பூதலம் வியந்திடும் புகழொடு பூப்போம்!       (கொடி)4

ஏழையும் செல்வனும் எனதென தென்றே
       எல்லோ ரும்தொழ நடுவினில் நின்றே
வாழிய வையகம் வாழ்ந்திட வேண்டி
       வாழிய கொடியே! வாழ்கபல் லாண்டு!       (கொடி)5