220நாமக்கல் கவிஞர் பாடல்கள்

161. பொங்குக பால்

பொங்கல் எனும்பொழுதில் - இன்பம்
       பொங்குது துன்பங்கள் மங்கி மறைந்திடும்
மங்களச் சொல்அதிலோர் - தெய்வ
       மந்திரம் உண்டெனச் சிந்தை களித்திட
எங்கள் தமிழ்நாட்டில் - மிக்க
       ஏழையும் செல்வரும் தோழமை எய்திடும்
இங்கிதம் கண்டிடும்நாள்! - பலர்
       எங்கும் புகழ்ந்திட உங்கள் குடித்தனம்
       பொங்குக பொங்குக பால்!       1

வெள்ளை அடித்திடுவோம் - எங்கள்
       வீடுகள் வாசலில் கூடிய மாசுகள்
அள்ளி எறிந்துவிட்டு - மிக
       அற்புதச் சிந்திரம் பற்பல வர்ணங்கள்
புள்ளிகள் கோலமிட்டுத் - தெய்வ
       பூசனைத் தீபங்கள் வாசனைத் தூபங்கள்
உள்ளத்தி லும்புகுந்தும் - அங்கே
       ஊறிய தீமைகள் மாறுதல் செய்திடும்
       சீருடைப் பொங்க லிதாம்!       2

மாடுகள் நாய்குதிரை - ஆடும்
       மக்களைப் போலவே ஒக்கும் உயிரென்று
நாடும் நினைவுவந்து - பொங்கல்
       நாளில் அவைகளின் தாளில் தளையின்றித்
தேடும் உரிமைதந்து - முற்றும்
       தேய்த்துக் குளிப்பாட்டி நேர்த்தி யுறமலர்
சூடின தாகச்செய்வோம் - அதில்
       தோன்றும் கருணையை ஊன்றி நினைந்திட
       ஏன்றது இந்தப் பொங்கல்!       3