புலவர் சிவ. கன்னியப்பன் 219

மிகுந்திடும் இன்பம்; நெஞ்சில்
              மிதந்திடும் அன்பும் பண்பும்;
       மேவிடும் தருமம் தானம்;
              மேவிய சுற்றம் சூழ
மகிழ்ந்திடும் உள்ளத் தோடு
              மனையறம் சிறக்க நீங்கள்
       மங்களம் பெருகி வாழ
              மனமார வாழ்த்து கின்றேன்.       1

சத்தியமும் சாந்தமுமே துணைக ளாகச்
       சன்மார்க்க வழிநடக்கும் கொள்கை தந்த
உத்தமனாம் காந்தியரை உள்ளத் தெண்ணி
       உலகாளும் பரம்பொருளை வணங்கி நின்று
சித்திரையாம் புத்தாண்டுத் திருநாள் காணும்
       சீர் மிகுந்த தமிழ்த்தாயின் புகழைப் பாடி
மெத்தநலம் பெருகிஉங்கள் குடும்ப வாழ்க்கை
       மேன்மேலும் சிறப்படைய வாழ்த்துகின்றோம்.       2

குறிப்புரை:-சன்மார்க்கம் - தூயவழி; பரம்பொருள் -
மேலான பொருள்.

160. புனித நன்னாள்

தமிழ் நாட்டின் தனிப்பெருந் திருநாள்
‘பொங்கல்‘ என்னுமிப் புனிதநன் னாள்முதல்
வையகம் முழுவதும் மெய்யறம் ஓங்கி
வறுமையும் பகைமையும் வஞ்சமும் நீங்கி
உங்கள் குடித்தனச் சிறப்புகள் உயர்ந்து
பண்டம் பலவும் பணமும் நிறைந்து
மக்களும் மனைவியும் மற்றுள சுற்றமும்
இன்பம் பெருகிட இல்லறம் நடத்திப்
பல்லாண்டு வாழ்ந்திடப் பரமனார் அருளும்
வாழிய உங்கள் வளமனைப் பொங்கல்.