228நாமக்கல் கவிஞர் பாடல்கள்

167. பொங்கல் படைப்பு

முத்தமிழ்ப் பண்பெனும் முதுபெருங் கற்கள்
       மூன்றையும் அடுப்பென முன்றிலில் கூட்டி
அந்தமிழ் விளைத்துள அறம்பொருள் இன்பம்
       அடங்கிய பானையை அடுப்பினில் ஏற்றி
மெய்த்தவ நெறியெனும் நெருப்பினைப் பொருத்தி
       மேவிய துயர்களை விறகென எரித்துச்
சத்திய சாந்தநற் பொங்கலைச் சமைத்துச்
       சன்னதி ஆண்டவன் முன்அதைப் படைத்து.       1

தீமைகள் யாவையும் தீர்ந்திட நாட்டில்
       திங்கள்மும் மாரிக்குத் திருவருள் கூட்ட
வாய்மையும் தூய்மையும் வளர்ந்திடும் படிக்கோர்
       வரந்தர வேண்டுமென் றிறைஞ்சிடு வோமே;
நோய்மையும் பஞ்சமும் நொடியினில் விலகும்
       நுண்ணிய நலந்தரும் புண்ணியம் பெருகும்
தாய்மையின் அன்புடன் தழைத்திடும் தருமம்
       தமிழ்ப்பெரும் பொங்கலில் தாரணி மகிழும்.       2

குறிப்புரை:- திங்கள் - மாதம்; இறைஞ்சிடுவோம் - வணங்கிடுவோம்.

168. பொங்கல் பிரார்த்தனை

சக்திதரும் சூரியனைத் தொழுது நின்று
       சர்வேசன் திருவருளை மனத்தில் எண்ணிப்
புத்தரிசிப் பொங்கலுண்ட பூரிப் போடும்
       புத்தாடை புனைந்தொளிரும் பொலிவி னோடும்
எத்துணையும் எவர்க்கேனும் இடைஞ்ச லின்றி
       எவ்வெவரும் அவ்வவர்தம் மனம்போல் வாழ
ஒத்துதவும் சமுதாயம் உலகில் ஓங்கும்
       ஒருவரத்தைத் திருவருள்பால் உவக்கக் கேட்போம்.       1