புலவர் சிவ. கன்னியப்பன் 227

உழவுத் தொழில்தான் உணவுதரும்
       உடையும் அதனால் அணியவரும்
பழகும் மற்றுள தொழில் யாவும்
       பயிர்த்தொழில் இன்றேல் விழலாகும்.       3

தங்கமும் வெள்ளியும் இருந்தாலும்
       தானியம் ஒன்றே விருந்தாகும்
இங்கிதன் உண்மையை உணர்ந்திடுவோம்
       ஏர்த்தொழில் மிகுந்திடத் துணிந்திடுவோம்.       4

உழவே செல்வம் உண்டுபண்ணும்
       உழைப்பே இன்பம் கொண்டுவரும்
உழவைத் தொழுதிட வருநாளே
       உற்றஇப் பொங்கல் திருநாளாம்.       5

ஏழையும் செல்வரும் இங்கிதமாய்
       இசைந்துளம் களித்திடும் பொங்கல்இது
வாழிய பயிர்த்தொழில் வளம்பெருகி
       வையகம் முழுவதும் வாழியவே.       6

குறிப்புரை:- வையகம் - உலகம்; எங்கணும் - எவ்விடத்தும்.

166. சமரசப் பொங்கல்

மனிதர் யாவரும் ஒரு ஜாதி
       மாநிலம் எங்கணும் ஒருநீதி
இனிதிவ் வெண்ணம் செழிந்திடவே
       இம்சையும் பொய்யும் ஒழிந்திடவே
தனிவழி அறமுறை தமிழேபோல்
       தளர்விலன் சத்திய அமுதூட்டும்
புனிதன்அக் காந்தியின் பொய்யறியாப்
       பொக்கைச் சிரிப்புகள் பொங்குதல்போல்
பொங்குக! பொங்கல்! பொங்குகவே!!
       புதிதொரு சுவைதரப் பொங்குகவே!

குறிப்புரை:-தளர்வு - சோர்வு; இம்சை - துன்பம்.