230நாமக்கல் கவிஞர் பாடல்கள்

யுத்தமே என்னும் ஒருபெரும் பேச்சால்
இத்தினம் எங்கும் யாவரும் ஏங்கிப்
பித்தரே யாகிப் பேதுறும் நிலையைச்
சற்றுநாம் மறக்கச் சாந்தியாம் பொங்கல்!       3

நினைவுகள் சிறந்து நிதிபல நிறைந்து
சினவகை சேர்ந்த சிறுமைகள் தீர்ந்து
மனைதொறும் மனைதொறும் மங்களம் தங்க
அனைவரும் இன்புறும் அன்பே பொங்கல்!       4

ஏழையென்று எவரும் ஏங்குதல் நீங்கி
மேழியின் சிறப்பில் செங்கோல் மின்னும்
வாழ்வினைக் காட்ட வருவதே பொங்கல்
வாழிய பொங்கல்! வாழிய உலகம்.       5

170. கண்ணன் தந்த தீபாவளி

தீபாவளிப்பெரிய திருநாள் - நாம்
       தெய்வப் பணிபுரிய வருநாள்
பாபாதி தீவினைகள் ஒழியத் - திடம்
       பண்ணித் தொலைத்துதலை முழுகித்
தூபாதி கற்பூரம் ஏற்றி - மலர்
       தூவித் தோத்திரங்கள் சாற்றி
பாபாவி நரகனை வென்றோன் - கண்ணன்
       மலரடி யைத்தொழுது நின்றால்.       1

கன்னங் கருநீலக் கண்ணன் - நாம்
       காட்சிக் கழகுமிகு வண்ணம்
மின்னும் பல அணிகள் பூண்டு - புவி
       மெச்சும் கட்டழகில் நீண்டு
சின்னஞ் சிறியவர்கள் உள்ளம் - அந்தச்
       சிங்காரம் கண்டுகளி கொள்ள
முன்னம் நம்மிடத்தில் வருவான் - குறை
       முற்றும் நீக்கிநலம் தருவான்.       2