இமயமுதல் குமரிமுனை இறுதி யாரும் இந்தியத்தாய் சொந்தமதை இகழ்ந்தி டாமல் அமைதியுடன் ஒற்றுமையை உறுதி யாக்கும் அதுதான்நம் குடியரசின் ஆக்கம் காக்கும். 2 சாதிமத பேதமெல்லாம் மறந்து விட்டுச் சமமாகப் பலதுன்பம் சகித்துக் கொண்ட சாதனையின் பயனன்றோ இன்று நம்மைச் சார்ந்திருக்கும் சுதந்தரத்தின் சக்தி யெல்லாம்? ஆதலினால் வேற்றுமையை வளர்த்தி டாமல் அன்புருவாம் காந்தி அண்ணல் நமக்குத் தந்த போதனையைத் தொடர்ந்துசெயல் புரிவோ மானால் புகழோடு குடியரசில் இன்பம் பொங்கும். 3 ஆண்டானுக் கடிமையெனும் அவலம் நீக்கி அரசாட்சி நமதுடைமை ஆக்கிக் கொண்டோம் பூண்டோடு வறுமையறப் பொருளா தாரப் புதுமுறைகள் திட்டமிட்டுப் பூர்த்தி செய்வோம் தீண்டாமை ஒன்றைமட்டும் ஒழித்து விட்டால் சாதிமதிக் கொடுமையெல்லாம் தீர்த்த தாகும்; தூண்டாத மணிவிளக்காய் நமது நாட்டின் குடியரசில் காந்திஒளி துலங்க வாழ்வோம்! 4 எந்திரத்தால் சந்திரன்போல் பொம்மை செய்தே எட்டாத பெருவெளியில் சுற்றச் செய்த விந்தைமிகும் விஞ்ஞான வித்தை தன்னை விதவிதமாய்ப் பாராட்டி வியந்திட் டாலும் சிந்தனையில் தெய்வபயம் இருக்க வேண்டும் செய்வதெல்லாம் கருணையுடன் செய்ய வேண்டும் மந்திரமாம் காந்திமகான் உபதே சத்தை மறவாமல் குடியரசில் வளர்க்க வேண்டும். 5 |