பற்பல விதமாய்ப் பார்த்துப் பார்த்தே அற்புத உண்மையை அறிந்தனன் தானும் அறிந்தோ அன்றோ அன்னியர் தமக்கே பரிந்தே நிற்கும் பாருமிவ் வாட்சியை நல்லதே என்று நம்பின ராகி. 90 நல்லதோர் துரைகளும் நாட்டினர் பலரும் மயங்கியே நிற்கும் மகிமையே மகிமை! முயங்கியே அவர்கள் செய்திடும் முறையில் ஆண்மையை இழந்திங் கழுந்திடும் தேசம் பான்மையை உணரார் பாவமும் அறியார். 95 ஆதலா லிந்த அரசியல் மாறத் தீதிலா வழியில் திரும்பினேன் உழைக்க, அரசியல் செலுத்தும் அதிகா ரிகளாம் ஒருவ ரிடத்தும் நான் உள்ளம் கசந்திலன் மன்னவ னிடத்துள மதிப்பிலும் குறையேன். 100 என்னினும் இந்த இயல்பிலா முறைமை இதுவரை கண்ட எல்லா முறையிலும் இதுமிகக் கெடுதிகள் இழைத்துள தென்று நம்பியே அதனுடன் நான்பிணக் குற்றென் அன்பு காடுவதே அக்ரம மென்றேன். 105 இந்தியா விற்கும் இங்கிலாந் திற்கும் சந்ததம் நன்மையை நாடியே நானும் ஒத்துழை யாமையே உயர்ந்த வழியென ஒன்றிய சுகங்கள் உயர்ந்தஇந் நாட்டில் மனை தொறும் இருந்து மானம் காத்ததாம். 110 நினைவரி தாகிய ராட்டினத் தொழிலை அழித்தனர் முற்றும் அறிந்தே யென்றிங் கெழுதினார் தெரிந்த இங்கிலீஷ் காரரே. காரண மிதமால் கணக்கிலா ஜனங்கள் சோறுண வழியும் துணியுமில் லாமல். 115 |