புலவர் சிவ. கன்னியப்பன் 29

தீமையை வெறுத்து நீக்கும்
       தீரமாய்த் திகழ்வாய் நீயே
வாய்மையில் எனக்கும் அந்த
       வலிமையை வழங்க வேண்டும்;
தாய்மையின் சகிப்பு நீயே
       தந்தருள் சகிப்புத் தன்மை;
தூய்மைசேர் ஒழுக்க வாழ்வில்
       துலங்கிடும் ஆன்மஜோதி.       2

உடலினும் உயிருக் கப்பால்
       உயர்ந்தொளிர் ஆன்மசக்தி!
கடலினும் பெரிதாம் உன்றன்
       கருணையில் மூழ்கச் செய்வாய்!
அடைவரும் அமைதி தந்தே
       அன்பெனும் அமுத மூட்டி
மடமைகள் யாவும் மாற்றி
       மங்களம் அருள்வாய் போற்றி.       3

16. ஏழை நெஞ்சே!

எண்ணரிய நெடுங்காலம் இடைய றாமல்
எண்ணியெண்ணித் தவவலிமை உடைய ராகித்
திண்ணியமெய் யறிவறிந்து தெளிந்த முன்னோர்
பண்ணியநற் பழக்கமெல்லாம் பழித்தாய் நெஞ்சே!       1

எத்திசையும் பிறநாட்டார் ஏற்றிப் பேசும்
பத்திமிகும் இலக்கியத்தின் மணமே வீசும்
முத்தமிழின் வழிவந்தும் முன்னோர் தம்மைப்
பித்தரென்றே எண்ணுகின்றாய் பேதை நெஞ்சே!       2

நாத்திகர்தான் நாகரிகச் சின்னம் போல
மூத்தறிந்த முன்னோரைப் பின்னம் பேசிச்
சூத்திரத்தில் ஆடுகின்ற பொம்மை யேபோல்
சொந்தபுத்தி இழந்துவிடல் நன்றோ? சொல்வாய்.3