312நாமக்கல் கவிஞர் பாடல்கள்

வஞ்சனை யற்ற வலிமையில் லாமல்
       வானத்தில் வந்தே எதிக்கநில் லாமல்
குஞ்சுகு ழந்தைகள் பெண்களைக் கொல்வார்
       கோரத்தை வீரத்தின் போர்என்று சொல்வார்கள்.       3

வாளுக்கு வாளாம் வில்லுக்கு வில்லாம்.
       வகைமிக்க ஆயுதம் தீர்ந்திடில் மல்லாம்!
ஆளுக்கே ஆள்நின்று நேருக்கு நேராம்
       ஆண்மையும் ஆற்றலும் செய்வது போராம்!
நாளுக்கு நாள்வந்து நள்ளிருள் தன்னில்
       நரிபோலும் குறிதேடும் கள்ளர்கள் என்னப்
பாலுக்கு வாய்வைக்கும் பாலரைக் கொல்வார்
       பாவத்தை நாகரீ கம்மெனச் சொல்வார்!       4

எந்திர வித்தைகள் வேணது கற்றோம்!
       என்னென்ன மோபல புதுமைகள் பெற்றோம்!
சந்திரன் செவ்வாய் மண்டலத் தோடும்
       சங்கதி பேச வழிகளைத் தேடும்
அந்தமில் லாபல சக்திகள் உற்றும்
       அடிதடி சண்டையை விட்டிட மட்டும்
தந்திரம் ஒன்று படித்திலம் ஐயோ!
       தரணியில் மக்கள் தவிப்பது பொய்யோ?       5

இத்தனை தீமைக்கும் ஏற்ற மருந்து,
       இந்திய ஞானிகள் கண்ட மருந்து;
உத்தமர் யாரும் உவக்கும் மருந்து
       உலகத்தில் துன்பம் ஒழிக்கும் மருந்து;
சத்தியம் சாந்தம் இரண்டு சரக்கைச்
       சமனிடை அன்பெனும் தேனில் குழைத்துப்
பத்தியம் தெய்வ நினைப்பொடும் உண்டால்
       பாருக்குள் பேருக்கும் போரிலை கண்டாய்.       6