புலவர் சிவ. கன்னியப்பன் 315

ஓடி இரைதேடிக் கிளியே உண்பது நீமறந்தாய்
நாடிப் பிறர்கொடுக்கக் கிளியே நாணமின் றிப்புசித்தாய்.       7

காட்டுப் பழவகையைக் கிளியே காணுதல் நீமறந்தாய்
போட்டதை உண்டிருக்க கிளியே புத்தி மகிழ்ந்தாயே.       8

சொந்த மொழிமறந்தாய் கிளியே சொன்னது சொல்லுகின்றாய்
இந்த விதம்வாழும் கிளியே இன்பம் உனக்கேது?       9

உன்குலத் தைப்பழிக்கக் கிளியே உத்தர வானாலும்
அங்கது செய்துயிரைக் கிளியே ஆசையு டன்வசித்தாய்.       10

எண்ணம் உனக்கிருந்தால் கிளியே எத்தனை நேரமடி
கண்ணைத் திறக்கு முன்னே கிளியே காட்சி சுதந்தரமாம்.       11

நல்ல வழிசொல்லுவேன் கிளியே நாடித் தெரிந்துகொள்நீ
அல்லல் வழிவிடுத்துக் கிளியே அன்பின் வழிதேடு.       12

கூட்டை உடைத்து வரக்கிளியே கூடாது உன்னாலே
சேட்டை வழிகளைநீ கிளியே செய்திடும் சாதியல்ல.       13

சொன்னதைச் சொல்லாதே கிளியே சோறிட உண்ணாதே
என்ன அழைத்தாலும் கிளியே ஏனென்று கேளாதே.       14

ரங்கரங் காவென்று கிளியே இங்கிதம் பேசாதே
எங்கேயெங் கேயென்று கிளியே ஏளனம் சொல்லாதே.       15

கொஞ்சி மகிழாதே கிளியே கெஞ்சிப் புகழாதே
அஞ்சி நடுங்காதே கிளியே ஆடி நடக்காதே.       16

கொண்ட எசமானன் கிளியே கோபித்துக் கொண்டாலும்
அண்டி உயிர்வாழக் கிளியே ஆகா தென்றுசொல்வாய்.       17

கொல்லுவன் என்றாலும் கிளியே கொஞ்சமும் அஞ்சாதே
மெல்லுவன் என்றாலும் கிளியே மேனி நடுங்காதே.       18

வெட்டுவன் என்றாலும் கிளியே வெற்றுரை என்றிருப்பாய்
சுட்டிட வந்தாலும் கிளியே சோதனை என்றிருப்பாய்.       19