316நாமக்கல் கவிஞர் பாடல்கள்

சோதனைக் காலமடி கிளியே சோர்ந்திடு வாயோநீ
வேதனை யைப்பொறுத்தால் கிளியே வெற்றி யுனதாகும்.       20

இந்தப் படிகிடக்க கிளியே இயலாது என்பதனை
உன்றன் எசமானன் கிளியே உணரும்படி நடப்பாய்.       21

இப்படி நீநடந்தால் கிளியே எண்ணியெண் ணிப்பார்த்தே
ஒப்பி எசமானன் கிளியே யோசனை செய்வாண்டி.       22

காரியம் உன்னாலே கிளியே காசளவு இல்லையென்று
வீரியம் பேசாமல் கிளியே விட்டிடு வான்உனையே.       23

கோதிச் சிறகுலர்த்திக் கிளியே கூசா மல்விரித்து
நாதன் புகழ்பாடிக் கிளியே நாற்றிசை யும்பறப் பாய்.       24

நீண்ட பெருவானம் கிளியே நியதி லேபறந்து
ஆண்டவன் சன்னிதியைக் கிளியே அண்டிச் சுகமடைவாய்.       25

குறிப்புரை:-வீரியம் - தைரியம்; காரியம் - செயல்.

199. பெண் மனம்

ஏனைய நாடுகள் எப்படி யாயினும்
தமிழ்நா(டு) அதனில் தானமும் தருமமும்
புண்ணியம், விரதம், தெய்வம், பூசனை
ஆகிய இவற்றை ஆடவர் மறப்பினும்
பெண்களே இன்னமும் பெரிதும் காப்பவர்.       5

இன்றும் தினந்தினம் இத்தமிழ் நாட்டில்
பிச்சைக் காரர்கள் பிரியத் துடனே
குறைகளைச் சொல்லிக் கூவும் போது
‘அம்மா‘ ‘தாயே‘, ‘ஆத்தா‘, ‘ஆச்சி‘
என்பன கூவி இரப்பதே சாட்சி.       10