318நாமக்கல் கவிஞர் பாடல்கள்

இப்படிப் பலபேர் ஏமாந்து போவதால்
பெண்மனம் என்பதைப் பிழைபடப் பேசிப்       20

‘புதிர்‘ என்று சொல்வது புரியாத் தனமே;
‘வஞ்சனை‘ என்பர் வஞ்சகம் உடையோர்.

குறிப்புரை:- வஞ்சனை - பொய், மாயம்.

201. குறத்தியர் பாட்டு

இமயம்முதல் குமரிவரை எங்களுடை நாடு
       இடையிலுள்ள தேசமெல்லாம் எங்களுக்கு வாசம்
தமிழ் முனிவன் பொதிகைமலை தன்னில்எங்கள் வீடு
       தரணியெல்லாம் சுற்றிடுவோம் தைரியம்தான் ஜோடு.       1

ஜாதியில்லை மதமுமில்லை சண்டையில்லை அதனால்
       சாமியென்றும் நேமம்என்றும் சடங்குகளும் இல்லை;
நீதிஎன்ற ஒன்றுமட்டும் நெஞ்சிலுண்டு பின்னே
       நீசர்என்று எங்களையார் பேசினாலும் என்னே?       2

பட்டமில்லை பதவியில்லை பகையுமில்லை ஐயே!
       பணமுமில்லை திருடர்என்ற பயமுமில்லை மெய்யே.
கஷ்டமில்லை நஷ்டமில்லை கவலையில்லை அம்மா!
       காணியில்லை பூமியில்லை கடனுமில்லை சும்மா!       3

மலையினிலே குடிசைகட்டி மரநிழலில் வாழ்வோம்
       மான்மயிரும் தேன்முதலாய் மக்களுக்கு விற்போம்;
தலையினிலே இடிவரினும் தைரியமாய் ஏற்போம்
       தஞ்சமற்ற யாரையுமே அஞ்சிடாமல் காப்போம்.       4

எந்தபாஷை எந்த நாட்டில் என்னபேச்சு எனினும்
எங்களுக்குப் பேதமில்லை எதையும்பேசத் துணிவோம்
சொந்த பாஷைப் பெருமைக்காக நூறு சொல்ல மாட்டோம்
சுற்றிச்சுற்றி எங்கும்சென்று சுகமுரைத்துக் கேட்போம்.       5