புலவர் சிவ. கன்னியப்பன் 319

வீடுவாசல் மாடிகூடம் எங்களுக்கு வேண்டாம்
வீதிதிண்ணை சத்திரங்கள் வேணதுண்டு ஆண்டே!
பாடுபட்டு ஓடியாடிப் பசியெடுத்தே உண்போம்.
பயமுறுத்தும் நோய்கள்எங்கள் பக்கம்இல்லை என்போம்.       6

பச்சைகுத்திக் குறிகள் சொல்லிப் பாடியாடித் திரிவோம்;
பாசிஊசி பலவும் விற்றுக் காசுவாங்கி வருவோம்;
இச்சையான உணவைத் தேர்ந்த இடத்திலாக்கித் தின்போம்;
இங்கும் அங்கும் எங்கும்தூங்கி இன்பவாழ்க்கை என்போம்.       7

பச்சையென்றால் ஒருநிறமாம் பச்சைமட்டும் அல்ல;
பலநிறமும் நேர்த்தியாகப் பதியவைப்போம்; நல்ல
இச்சையான உருவம்எல்லாம் எழுதிடுவோம் மெய்யே;
இப்பொழுதே காட்டுகிறோம் என்னவேண்டும் ஐயே!       8

காதலனோ காதலியோ கண்காணாப் பொழுதில்
கண்டுகளி கொண்டுமனக் கவலை கொஞ்சம் ஒழிய
ஆதரவாய்க் கைதனிலே அலர்வடிவும் பேரும்
அழகாகப் பச்சைகுத்தி அமைந்திடுவோம் பாரும்.       9

குறிதவறாக் குறியுரைப்போம் குறைகள் எல்லாம் தீர
குற்றம் எல்லாம் நீங்கிவிடக் கோளாறும் கூறி
நெறிமுறையாய் நீங்கள் எல்லாம் நெடுநாளும் வாழ
நினைந்திடுவோம் எங்கள்குலத் தெய்வமெலாம் சூழ.       10

நாள்கிழமை நட்சத்திரம் பார்ப்பதில்லை நாங்கள்
நல்லநல்ல சோசியங்கள் சொல்லிடுவோம் பாங்கே;
ஆள்வடிவம் பேச்சுநடை அவைகளையே கொண்டு;
அத்தோடு கைரேகை அதையும் பார்ப்ப துண்டு.       11

காசுபணம் பேசிவரும் சோசியரைப் போலக்
காகிதமும் பென்சிலுமாய்க் கணக்குப்போட வேண்டாம்
ஆசையுடன் பகவதியின் அருள்வாக்கி னாலே
அச்சமற்றுக் குறியுரைப்போம் பச்சைக் குத்தல் போல.       12