(என்பன பாடி இருகரம் கூப்பி, "எது வேணும் சாமி! என்ன வேணும் அம்மா? பச்சை குத்தவா? பாசிஊசி வேணுமா? குறிகேட்க ஆசையா?" என்றனர் குறத்தியர் சந்தோஷ மடைந்த சங்கர லிங்கம் "குறிசொல்லு பார்ப்போம் பணம்இன்னும் கூட்டித் தருகிறேன் என்றான்" தயங்கா(து) அவர்கள்) ராணியுடன் ராஜனைப்போல் நல்ல ஜோடி நீங்கள்; ராமனுடன் சீதையைப்போல் ரஞ்சிதமாய் வாழ்வீர். ஆணையிட்டுச் சொல்லுகிறோம் ஐயமில்லை ராஜா அம்மாளும் நீங்களுமே ஆசைமிக்க நேசம். 13 கண்மணிபோல் பெண்ணிவளைக் கலியாணம் பண்ணிக் கப்பலேறி சீமைசென்று காசுபணம் சேர்ப்பீர். பெண்மணியும் ஒருகணமும் பிரிந்திருக்க மாட்டாள் பேசுவதேன் உங்களுக்கு ஈசன்முடி போட்டான். 14 பொல்லாத வேளைகொஞ்சம் புலப்படுத்தே பின்னால் பொன்னான வாழ்க்கையிலே சின்னதுன்பம் மன்னா நில்லாது சீக்கிரமே நீங்கிவிடும் ஆண்டே நெஞ்சமதில் கொஞ்சங்கூட அஞ்சிடுதல் வேண்டாம். 15 அம்மாளைப் பெற்றவருக்(கு) அதிகபணம் இல்லை; ஐயாவின் வீட்டினிலே அளவிலாச் செல்வம்; கொம்மாளம் போட்டே உங்கள் குடிவிளங்க வேணும் குத்துவிளக் கேபோலப் புத்திரரும் தோணும். 16 பாருக்குள் எத்தனையோ பாதகரும் உண்டு பழிபேசித் தூற்றிடுவார் பயமில்லை ஒன்றும்; போருக்குள் ஆண்சிங்கம் போலஜயம் பெறுவீர் பொன்னான பெண்ணிவளைப் போற்றிநலம் உறுவீர். 17 கோபமில்லாக் குணமுடனே குடித்தனமே செய்வீர் குறைச்சலில்லா யோகமெல்லாம் கூடிவரும் மெய்தான் சோபனமே சோபனமே சேபனமே நீங்கள் சுகமுடனே வாழ்ந்திடுவீர் குறியுரைத்தோம் நாங்கள். 18 |