ஆளை மிரட்டுகின்ற அதிகாரம் இல்லையம்மா! வேளைப்பொழு(து) இல்லாமல் வேலைசெய்யும் சீவனந்தான் காளி குலதெய்வம் காத்திடுவாள் கண்ணுறங்காய். (ஆரா)3 அதிகாரம் என்றுசொல்லி அநியாயம் செய்தறியோம் சதிகாரத் தந்திரத்தால் சம்பாதித்(து) உண்பதில்லை துதிபாடிப் பொய்பேசிச் சுகித்திருக்கும் சூதறியோம் கதிகேடு வந்துவிடக் காரணங்கள் இல்லையம்மா. (ஆரா)4 வாது வழக்கறியோம்; வம்புதும்பு செய்தறியோம்; சூது புரிந்தறியோம் பொய்ச்சாட்சி சொன்னதில்லை; நீதி நெறிதவறி நிந்தைசொல்ல நின்றதில்லை; ஏதும் ஒருகெடுதி இங்குவர ஞாயம்இல்லை. (ஆரா)5
வேலையின்றிக் கூலிகொள்ளும் வித்தைகளைக் கற்றறியோம். கூலியின்றி வேலைகொள்ளும் கொடும்பாவம் செய்தறியோம் காலையென்றும் மாலையென்றும் காலமின்றிப் பாடுபட்டு நாலுபணம் வந்தாலும் நல்லசுகம் செய்துவைப்போம். (ஆரா)6 |