புலவர் சிவ. கன்னியப்பன் 335

அநேகக் கலைகளைத் தமிழன் அறிவான்;
ஆயினும், அவைகளும் அறத்தையே அடுக்கும்.       40

நூல்களை எழுதும் கலையின் நோக்கமும்,
கற்பனைக் கதையின் கலையும் அறமே.
தருமம் பேசாத் தமிழ்நூல் கலையை
இலக்கிய மாகவே எண்ணான் தமிழன்.
கலைகளின் வழியே கருணையைப் புகட்டல்       45

எளிதாம் எனநம் முன்னோர் எண்ணியே
கண்ணுங் கருத்துமாய்க் கலைகளைக் காத்தனர்.
இயல்என எழுதியும் இசைஎனப் பாடியும்,
கற்பனை நிறைந்த கவிதைகள் செய்தும்,
நாட்டியம் பயின்றும், நாடகம் நடித்தும்,       50

குளங்களை வெட்டியும் கோபுரம் கட்டியும்,
சிலைகளைச் செதுக்கிச் சித்திரம் வரைந்தும்,
மலைகளைக் குடைந்து மண்டபம் ஆக்கியும்,
கலைகளை வளர்த்த காரணம் எல்லாம்,
செயற்கை இன்பமும் இயற்கையில் சேர்ந்துடன்       55

அறிவைத் துலக்கி, அன்பைப் பெருக்கிச்
சச்சரவு இல்லாச் சமுதாய வாழ்வை
உண்டாக்கி வைத்தல் ஒன்றே நோக்கம்,
புலன்களுக்கு எட்டாப் பொருளாம் இறைவனைப்
புலன்களுக்கு இன்பம் புகட்டவே புரியும்       60

கலைகளின் மூலமாய்க் கருதலாம் என்றே
கடவுளின் நினைப்பே கலைகளில் கலந்திடப்
பழகிய பெருமையே தமிழ்க்கலைப் பண்பு.