211. என்னுடை நாடு ;இந்திய நாடிது என்னுடை நாடே; என்று தினந்தினம் நீயதைப் பாடு; சொந்தமில் லாதவர் வந்தவர் ஆள தூங்கிக் கிடந்தது போனது மாள; வந்தவர் போனவர் யாரையும் நம்பி வாடின காலங்கள் ஓடின தம்பி! இந்தத் தினம்முதல் "இந்திய நாடு ‘என்னுடை நாடெ‘ன்ற எண்ணத்தைக் கூடு. 1 கன்னி இமயக் கடலிடை நாடு கடவுள் எமக்கெனக் கட்டிய வீடு; என்ன முறையி(து) ஏனிதை வேறு இன்னொரு நாட்டினர் ஆள்வது கூறு; சொன்னவர் கேட்டவர் யாரையும் நம்பிச் சோர்ந்து கிடந்தது தீர்ந்தது தம்பி! என்னுடை நாட்டினை நானிருந்து ஆள இந்தத் தினம்முதல் எண்ணுவன் மீள. 2 தன்னுடை வேலையைத் தான்செய்வ தாலே தப்புவந் தாலும் சுதந்தரம் மேலே; இன்னொரு யாருக்கும் இதிலென்ன கோபம்? என்றன் உரிமைசொன் னால்என்ன பாபம்? அன்னியர் ஆள்வதில் நன்மை வந்தாலும் அடிமையின் வாழ்வது நரகம்எந் நாளும்; என்னுடை வீட்டுக்கு நான்அதி காரி என்பது நான்சுய ராச்சிய பேரி. 3
பாரத நாடுஎன்றன் பாட்டன்றன் சொத்து; பட்டயத் துக்குஎன்ன வீண்பஞ்சா யத்து? யாரிதை வேறோர் அன்னியர் ஆள? அருகில் கிடைத்தது போனது மாள; |